தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Tuesday, August 12, 2014

பாரதி மனிதனா? மகானா? (மீள்பதிவு. )







அண்மைய காலமாக என்னை வெகுவாக யோசிக்க வைத்த கேள்வி இது....தமிழன் எனும் போதும், தமிழ் இலக்கிய மரபுகள் எனும் போதும் பாரதியை பற்றி பேசாதோர் யாருமிலர் என்றே கூற வேண்டும் .

ஆயினும் இவரின் படைப்புக்களை உள்ளர்ந்தமாக அலசி ஆராயும்போது அது மிகவும் சாமான்யனின் படைப்பாகவே கருதப்பட்டு வருவதாக தற்கால இலக்கிய கர்த்தாக்கள் விசனித்து வருவதே என்னால் அவதானிக்க முடிகின்றது.. இது எவ்வளவு தூரத்திற்கு நியாயமானது? உண்மையில் இந்த முண்டாசு கவிஞன் வெறும் சாமான்யனா?இல்லை சமூகவியலாளனா? இவை பற்றி கொஞ்சம் என அறிவுக்கு எட்டிய வகையில் பதிவில் பகிர்கிறேன்...




பாரதியாரின் படைப்புக்கள் தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியாக கருத முடியாது, அவரின் படைப்புகளில் வெறுமனே வேகம் மட்டுமே உள்ளது. உணர்ச்சி பிழம்பின் உச்சத்தில் அவரால் புனையப்பட்ட பாடல்களும் படைப்புகளும் இலக்கிய மரபினை கொண்டிராதது .. பாரதியின் எழுத்துகளுக்கு பின்புலம் இந்திய சுதந்திர தாகம் மட்டுமே... இவ்வளவு காலமும் தமிழ் இலக்கிய மரபுகளின் முன்னோடி இந்த முண்டாசு கவிஞன் எனும் வாதம் ஏற்புடையது அல்ல என பலர் கூறிகொள்கின்றனர்.

அந்த வகையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் விவாத பக்கம் ஒன்றில் இவை பற்றிய பல சான்று பகிர்வுகளை அவர் முன்வைத்துள்ளமையை கான கிடைத்தது.. இவை சார்ந்த பல தேடல்களை நான் செய்யும் பொழுதே இலங்கை தமிழருக்கும் இந்த விவாதத்திற்கும் எத்தகைய பங்கு இருகின்றது என்பதை என்னால் உணர முடிந்தது..

( எப்போதும் எமது துணைக்கண்டத்து துரும்பையும் பெரியதாக சிந்திக்கும் எமது பாங்கு இங்குள்ள கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் பலதை துச்சமாக எண்ணி உள்ளதே நினைத்து எனக்கு பெரும் தலைகுனிவாக உள்ளது. )

1995 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஹட்டன் நகரில் இருந்து வெளியான "நந்தலாலா" எனும் சிற்றிதழில் இது பற்றிய கருத்துரை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் முன்வைக்க பட்டது"பாரதியின் இன்றைய மதிப்பு" எனும் ஆக்கம். அவற்றின் தொகுப்பு:\



1. பாரதி நவீனத்தமிழின் முதல்புள்ளி. நவீனத்தமிழ்க்கவிதையின் தொடக்கம். இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக உருவான இந்திய நவகவிஞர்களில் முக்கியமான சிலரில் ஒருவர். தாகூர், ஜீபனானந்ததாஸ், குமாரன் ஆசான்,குவெம்பு என்று நீளும் அந்த நவகவிஞர்கள்தான் நவீன இந்திய இலட்சியவாதத்தை உருவாக்கியவர்கள். நம் ஜனநாயகத்தின் உண்மையான சிற்பிகள். அந்த இடம் பாரதிக்கு உண்டு 
"


2. பாரதி நவீனத் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கிய முன்னோடி. நாம் இன்று உணரும் தமிழ்ப் பண்பாட்டு சுயம் என்பது பாரதியால் தமிழ்ச்சமூக மனத்தில் உருவாக்கப்பட்டது. செவ்விலக்கியம், நாட்டார் கலை, மதங்கள் அனைத்தையும் இணைத்து அவர் அதை உருவாக்கினார்.


3. பாரதியின் ஆக்கங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளவை இசைப்பாடல்கள். ஆனால் அவை கவிதைகள் அல்ல. அவை எடுத்தாளப்பட்ட கவிதைகள். இசைப்பாடல் என்பது நேரடியான கவிதை வடிவம் அல்ல. இசையில்லாமல் அவற்றின் இடம் முழுமையடைவதில்லை.பாரதியின் இசைப்பாடல்கள் பெரும்பாலும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் அஷ்டபதியின் சாயல் கொண்டவை. அவரைத் தமிழின் மிகச்சிறந்த இசைப்பாடலாசிரியர்களில் ஒருவராக கருதலாம்



4. பாரதியின் காலகட்டத்திலேயே நல்ல நவகவிதைகள் எல்லா மொழிகளிலும் உருவாகிவிட்டிருந்தன. பாரதியின் கவிதைகளில் குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் சில தனிக்கவிதைகள் முக்கியமானவை. மழை, அக்கினிக்குஞ்சு, பிழைத்த தென்னந்தோப்பு போன்றசில கவிதைகள் மிகச்சிறப்பானவை.ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஒரு பெரும் கவிஞரை நிறுவுவதற்கு அவை போதாது.



5. ஆகவே பாரதி ஒரு சிறந்த கவிஞர், மகாகவிஞர் அல்ல. தமிழின் மாபெரும் கவிமரபை வைத்துப்பார்த்தால் மகாகவி என்ற பட்டத்தை ஒருவருக்கு எளிதில் வழங்கிவிடமுடியாது. கபிலர், பரணர், அவ்வையார்,பாலைபாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ,திருத் தக்கதேவர், திருவள்ளுவர், நம்மாழ்வார், கம்பர் , சேக்கிழார் என நம் பெருங்கவிஞர்களை நாம் பட்டியலிட்டால் அதில் ஒருபோதும் பாரதியைச் சேர்க்கமுடியாது.


6. பாரதியின் நல்ல கவிதைகள் கூடத் தரிசனத்தாலும்மொழிநுட்பத்தாலும் என்றும் நீடிக்கும் அழியாத பெருங்கவிதைகள் அல்ல. மனவேகத்தால் மட்டுமே நிலைகொள்வன. வேகம் மூலம் கைவரும் அபூர்வமான சொற்சேர்க்கைகளுக்கு அப்பால் நல்ல கவிதைகளில் நிகழும் வடிவ-தரிசன முழுமை அவரது கவிதைகளில் மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. பலகவிதைகளில் நல்ல வரிகள் உண்டு, ஒட்டுமொத்தக் கவிதையில் அந்த முழுமை கைகூடியிருப்பதில்லை.


7. பாரதி தமிழின் வழக்கமான மரபுக்கவிதையை இசைத்தன்மை மற்றும் நாட்டார்தன்மையை சேர்த்துக்கொண்டு உடைத்துப் புதிதாக ஆக்கினார்.அதன் மூலம் நம் மரபுக்கவிதையில் ஒரு குறுகியகால சலனத்தை உருவாக்கினார். ஆனால் அவரது சாதனை உரைநடையில்தான். அவர் நவீன உரைநடையின் பிதா என்பதே அவரது முதல்முக்கியத்துவம். அவரில் இருந்தே இன்றைய புதுக்கவிதை பிறந்தது


8.பாரதி தமிழ் இதழியலின் தொடக்கப்புள்ளி. இன்றைய இதழியல்தமிழ் அவரது உருவாக்கமே. அதன் சொல்லாட்சிகள், அதன் மொழிபுமுறை எல்லாமே அவரால் உருவாக்கப்பட்டவையே


9. பாரதி உலக இலக்கியத்தை நோக்கித் திறந்த தமிழின் முதல் சாளரம். மொழியாக்கத்திலும் மேலைக்கருத்துக்களை எடுத்தாள்வதிலும் அவர் தமிழின் முன்னோடி.
10. பாரதி தமிழ் நவீன உரைநடையின் அமைப்பை உருவாக்கியவர். ஆனால் பாரதியின் புனைகதைகள் மிகச்சிலவே இலக்கியமாகப் பொருட்படுத்ததக்க
வை. அவர

து சமகால வங்க, இந்தி, கன்னட ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் பாரதியின் கதைகள் எளிய நற்போதனைக்கதைகளாக உள்ளன. கதைமாந்தரும் சரி, கதைச்சந்தர்ப்பங்களும்சரி, சித்தரிப்பும்சரி மிக ஆரம்பநிலையில்மட்டுமே உள்ளன.""


ஒருபக்கம் பாரதி பற்றி உருவாக்கப்பட்டுள்ள பெரும் பிம்பம். மறுபக்கம் கலைநோக்கோ சமநிலையோ இல்லாமல் அவரை சாதிய நோக்கில் அவதூறுசெய்யும் எழுத்துக்கள். இரண்டும் இரண்டு வகையில் இலக்கிய வாசகனைக் கட்டாயப்படுத்துகின்றன.


பாரதியின் கவிதைகள்,கதைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு அவற்றின் சாதனைகளை சரிவுகளை விரிவான விமர்சன விளக்கத்துடன் எழுதவேண்டியிருக்கிறது. அதையே இன்றைய இளைஞர்களில் பலரின் எதிர்வினைகள் காட்டுகின்றன. ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாரதியின் தேசியப்பாடல்கள் இன்றைய இலக்கிய ரசிகனுக்குப் பெரிய அனுபவத்தை எதையும் அளிப்பவை அல்ல.

இன்னொருபக்கம் அவரது தோத்திரப்பாடல்கள் போன்றவை வெறும் செய்யுள்களாகவே நின்றுவிட்டவை. இன்று முழுபாரதி தொகுப்பை வாசித்தால் அந்த செய்யுட்களே அளவில் அதிகம் என்பதை ஒரு வாசகன் காணமுடியும்.
இவ்விரு தளங்களுக்கும் அப்பால் பாரதியின் சாதனைகள் அவரது குறைவான பாடல்களில் அவர் அடைந்த நேரடியான மன எழுச்சியை சார்ந்தவை. க.நா.சு சுட்டிக்காட்டிய மழை ஒரு சிறந்த உதாரணம். வசனகவிதைகளில் பாரதி அவரைத் திணறடித்த யாப்பின் தளை இல்லாமல் சுதந்திரமாகப் பறந்திருக்கிறார்.
இதெல்லாம் இன்றைய இலக்கியவாசகனுக்குத் தெளிவாகவே தெரிபவை. ஆனால் இவற்றை எழுத, விவாதிக்க நம்மிடம் பெரும் மனத்தடை இருக்கிறது.

எழுத்தாளரின் இந்த கருத்துரைக்கு பலரிடமிருந்து பலவைகையான கண்டன அலைகள் கிளம்பி இருந்ததை நான் அவதானித்தேன்.. ஆயினும் என்னால் இவரின் சில முன்வைப்புகள் நியாயபூர்வமாக இருந்தமையை மறுக்க முடியாது .. அவர் குறிப்பிட்டதை போல பாரதியின் பல ஆக்கங்கள் உணர்ச்சி கொந்தளிப்போ அன்றில் ஆக்கபூர்வ படைப்பு அல்ல என்பதுவே அவர் முன் வைக்கும் வாதம்.
//

ஜெ: 
எதையுமே உணர்ச்சிக்கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்வது, வெட்டிச்சண்டையாக மாற்றுவது என்றே நம் இலக்கிய விமர்சனச்சூழல் இருக்கிறது. எந்த விமர்சனமும் ஒரு படைப்பாளி மீதான வாசிப்பைக் கூர்மையே ஆக்கும் என்ற புரிதலுடன் நாம் விவாதித்தால் ஒருவேளை வரும்காலத்தில் நம்மால் பாரதி பற்றி ஒரு நல்ல கூட்டுவாசிப்பை நோக்கிச் செல்லமுடியலாம் -


[குழும விவாதத்தில் இருந்து]//

ஆக, பாரதி பற்றிய விமர்சன மரபு பல காலங்களாக முன் எடுக்கப்பட்டு வந்துள்ள போதும் இவற்றின் முரணை உணர முடியாமல் பழமை பேசிகளாக நான் இன்னும் யோசிக்காமல் இருபதுவும் கவலைகிடமே..


இந்த ஆக்கத்தின் போது "இதழியலின் முன்னோடி எங்கள் பாரதியார் " என்ற ஒரு ஆய்வு நூலினை வாசித்த ஞாபகம் எனக்கு வந்தது. அந்த நூலின் அடிப்படையில் "இதழாளர் இளசை சுப்பிரமணியம் " என்ற பாரதியின் இதழிய தொண்டு காலத்தை பதின் ஏழு ஆண்டுகளாக ஆய்வாளர் வரையறுத்து உள்ளார். மேற்படி நூலில் சக்கரவர்த்தினி, பால பாரதம், இந்தியா உள்ளிட்ட அவரின் பத்திரிகைகளின் ஆதார பூர்வ புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தன.



மேற்படி மின் நூலினை  இங்கே பெற்றுக்கொள்ளலாம்



அண்ணல் மகாத்மா காந்தி ஒரு நிருபரிடம் பின்வருமாறு கூறி இருந்தார் "பத்திரிகைகளில் பணிபுரிவதே தியாக வாழ்க்கை தான்".. ஆக பத்திரிகை யாளன் என்பவன் தியாக சிந்தனை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது அவரின் கூற்று அதன் படி பாரதியும் நடந்து காட்டி இருக்கின்றார் என்பது ஆய்வாளர் "தமிழ் மணி மானா".வின் கருத்து..



ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப காலத்தில் விடுதலை வேட்கையின் நிமித்தம் பாரதியின் உணர்ச்சிபூர்வமான எழுத்துக்களும் ஆக்கங்களும் ஒரு முன் அனுபவமின்றிய ஒரு எழுத்தாளன் எனும் பதம் பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.....

மேற்படி அந்த ஆய்வு நூலில் பாரதியை ஒரு இலக்கிய வாதியாக காட்டும் இதழ்கள் சிலதும் முன் வைக்கப்பட்டு உள்ளன.

  • ஆர்யா - 1915
  • மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் - 1915
  • நியு இந்தியா - 1916
  • பெண் கல்வி - 1916
  • கலைமகள் - 1916
  • தேசபக்தன் - 1920
  • கதா ரத்னகாரம் - 1918 - 21

இந்த நூலின் இறுதியில் இலங்கையின் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முதன்மையானவரான அமரர், பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் எண்ணப்பகிர்வானது " பாரதியின் இலக்கிய ஆவேசத்தையும், ஆத்மா பக்குவத்தினையும் அவரது கவிதைகள் திறம்பட காட்டுவான ஆயினும் அவரது சிந்தனை துளிகள் , உணர்ச்சி பொறிகள் ஆசாபாசங்கள் என்பன அவரது வசன படைப்புகளின் உள்ளே தெளிவாக காட்டுகின்றன" என்கிறது.




ஆயினும் என் பார்வையில் பாரதி என்பவன் ஒரு படைப்பாளி..அம்மனுஷ்யன் அல்லன். மேற்கண்ட நூலில் பாரதியின் படைப்புக்களின் திறம் பற்றி ஆராயப்பட்டது.. அதில் எனக்கு சில ஐயப்பாடுகளும் உள்ளன.




எழுத்தாளன் என்பவனுக்கும் இலக்கியவாதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. இது கவிஞர்களுக்கும் பொருந்தும். புதுகவிதை புனைபவனுக்கும் ஒரு மரபு கவிஞனுக்கும் நிறையவே வித்தியாசம் இருகின்றது.. அதே உணர்ந்துகொள்ள ஒரு தனிப்பட்ட பக்குவமும் அறிவாற்றலும் இருக்க வேண்டியதுவும் அவசியமே... 



என்னை பொறுத்த வகையில் உணர்ச்சி பாங்கான வேகத்தில் தோன்றும் படைப்புகளுக்கும் உள்ளர்ந்தமான இலக்கிய படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளன.. பாரதியின் படைப்புக்கள் அமானுஷ்யமானவை அன்றில் ஆக்க பூர்வமானவையே....



மேற்படி எனது பதிவினை பதிவிட்ட பிறகு எனது ஊடக நண்பர்கள் சிலரால் மேற்படி கருத்து விவாதிக்கப்பட்டது 



அந்த வகையில் மூத்த எழுத்தாளர் ஜின்னா ஷெரீப்தீன் அவர்கள் பதிவிட்ட கருத்து இங்கே 



அவ்வண்ணமே பதிவர் தோழி , சோதரி தேனம்மை லெஷ்மண் அவர்கள் இந்த பதிவிடல் குறித்து சில கருத்துக்களை அவரது வலைத்தளமான "சும்மா" விலும் குறிபிட்டு இருந்தார்.

பதிவினை வாசிக்க இங்கே சொடுக்கவும்



எமக்கு முந்திய தலைமுறையினர் ஏற்றுக்கொன்ட விடயங்கள் காலப்போக்கில் வாதிக்கப்பட்டு குறை அறியப்படுவது . இதனை நவீன வளர்ச்சியின் தார்மீகம் என்பதா? அல்லது தவறுதல் என்பதா?..
எவ்வாறாயினும்.. ஆக்கபூர்வ கருத்தினை மீண்டும் மீண்டும் அலசி விமர்சிப்பதால் அது மேலும் மெருகேரும்..




மேற்படி என் தனிப்பட்ட கருத்து பகிர்வானது பலரையும் கருத்து கூற வைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் அணைத்து விமர்சனகளையும் வேண்டி நிற்கிறேன்......


-பொ.சைலஜா

[Valid RSS]

0 comments:

Post a Comment