தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Thursday, April 10, 2014

வெற்றியென்பது யாதெனின்.. . தி.தரணீதரன்.






வெற்றியென்பது யாதெனின்.. 



இருபது மில்லியன் மக்களின் இரு தசாப்த கால கனவு இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தை இம்முறை இலங்கை அணி கைப்பற்றியதன் மூலம் நிறைவானது.


எதிர்பார்ப்புகள்,ஏக்கங்கள்,பிரார்த்தனைகள் என்று எல்லோரது கனவும்  இலங்கைக்கு மீண்டுமொரு உலக கிண்ணம் கிடைக்க வேண்டும் என்பதே,1996 ம் ஆண்டில் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியை வெற்றி கொண்டதன் மூலமாக இலங்கைக்கு முதலாவது உலக கிண்ணம் கிடைத்தது.


அதற்க்கு பின்னர் இலங்கை அணி 5 தடவைகள் ICC யின் உலக கிண்ண தரத்திலான இறுதி ஆட்டங்களில் பங்கெடுத்தது,ஆனாலும் அதிஷ்டமும் கைகொடுக்கவில்லை இலங்கையர்களின் ஆட்டத்திறனும் கிண்ணத்தை ஏந்தும் அளவில் இருந்திருக்கவில்லை.
இப்படியெல்லாம் இருக்கையிலேயே இம்முறை இலங்கை அணி சாதித்துக்காட்டியிருக்கிறது  .

2002 ஆண்டு மினி உலக கிண்ணம் எனப்படும் ICC  CHAMPION TROPHY ஆட்டங்களில் சனத் ஜெயசூரிய தலைமையிலான இலங்கை அணியும் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்குமிடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில் கிண்ணம் இரு அணிகளுக்கும் வழங்கபட்டது.

2009 ம் ஆண்டு 2 வது உலக T20 போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில்  இடம்பெற்றபோது யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சங்ககார தலைமையிலான இலங்கை அணியை 8 விக்கெட்களால் வெற்றி கொண்டது.

2011 ம் ஆண்டு 10 வது உலக கிண்ணத்தின் இறுதி போட்டி டோனி  தலைமையிலான இந்திய அணிக்கும் சங்ககார தலைமையிலான இலங்கை அணிக்குமிடையில் மும்பையில் நடைபெற்றபோதும் இலங்கை தோல்வியையே தழுவியது.

இப்படியிருக்கையில் தான் 2012 ம் ஆண்டு 4 வது உலக T20 போட்டியின் இறுதிபோட்டி டரென் சாமீ தலைமையிலான மேற்கிந்திய தீவுகளுக்கும் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அணிக்குமிடையில்  இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் இலங்கை கிரிக்கெட் அணி  சொந்த நாட்டிலும் தோல்வியையே தழுவியது.


இப்படி உலக கிண்ண 4 இறுதி ஆட்டங்களில் தோல்விகளை தழுவியதற்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி மலிங்க தலைமையில் மகுடம் சூடியிருக்கின்றமை ஒரு வரலாற்று சாதனையே.
இலங்கையின் முன்னணி வீரர்களான சங்ககார ,மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் இந்த போட்டி தொடரோடு சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு விடைகொடுக்கும் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இந்த இருவருக்கும் விடைகொடுக்கும் போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றி சாதிக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது அவாவும்.அதனை ஒப்புவிக்கும் முகமாகவே முக்கிய அரை இறுதி போட்டியில் மழை குறுக்கிடவே மேற்கிந்திய தீவுகளின் தலைவர் சமி குறிப்பிட்டார் "கடவுளின் விருப்பபடி கனவான்கள் கிண்ணத்தோடு விடைபெறட்டும்" என்று.இம்முறை காலதேவனின் கடைக்கண் பார்வையும் இலங்கை வசம் இருந்தமையும் இன்னுமொரு காரணம்.





இலங்கை அணி இம்முறை கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புள்ள  அணியாக கருதப்பட்டது உண்மைதான்.ஆயினும் அவர்கள் அசைக்க முடியாத அணியாக தொடரில் சாதிக்கும் இந்திய அணியை எதிர்கொள்கிறார்கள் என்ற போதுதான் எல்லோருக்கும் ஒரு வித பதற்றநிலமை காணப்பட்டது.பலமான துடுப்பாட்ட வரிசை,பந்துவீச்சு,களத்தடுப்பு என்று சகல துறைகளிலும் மேம்பட்ட அணியாகவே இந்தியா காணப்பட்டது .இதைவிடவும் அனுபவம் வாய்ந்தவர் +அதிஷ்ரகாரர்  என்று அழைக்கப்படும் டோனியின் தலைமைத்துவம் .

இப்படி வரிசைகட்டி நின்ற கேள்விகளுக்கு மத்தியில் தான் மகுடம் சூடப்பட்டிருக்கிறது.உலக கிண்ண இறுதிப்போட்டியில் இதுவரை இந்தியா தோல்வியை தழுவியதில்லை என்பதும் முக்கியமானதே.இந்தியாவை பொறுத்த வரையில் வென்றால் இன்னுமொரு கிண்ணம்,தொற்றுபோனால் பெரிதாக ஒன்றுமில்லை என்ற நிலைமை.

ஆனால் மறுபுறத்தில் இலங்கை எதிர்கொண்ட சிக்கல்கள் பலவிதம்,பலரும் பலவிதமாய் பேசிக்கொள்ள பக்குவப்படாத ,அனுபவமற்ற தலைமைத்துவம்,அணிக்குள்ளேயே யாரை சேர்ப்பது,விலக்குவது என்ற விடைகாணா வினாக்கள்.2 கனவான்களின் இறுதி போட்டி என்பதனால் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட எதிர்பார்ப்புகள்,4 முறை இறுதிப்போட்டிகளில் கிண்ணத்தை இழந்த வேதனைகள் என்று இத்தனைக்கும் மத்தியில் ஒரே வெற்றி மூலமாய் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியோடு நேர்த்தியாக ஆடிய விதம்தான் இலங்கைக்கு  பாராடுக்கள் குவிய காரணம் எனலாம்





IPL ,BBL போன்ற பணம் சம்பாதிக்கும் T20 போட்டிகளில்தான் மாலிங்க கவனம் செலுத்துகிறார் ,தேசிய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்கும் நாட்டம் அவருக்கு இல்லை,பங்களாதேஷ் செல்வதற்கு முன்னர் பயிற்சிகளுக்கு திரும்புங்கள் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அழைப்பு விடுத்தும் பொருட்படுத்தாத நிலையில் அவுஸ்ரேலியாவில் BBL  போட்டிகளை முடித்துவிட்டுத்தான் 
மலிங்க தாயகம் திரும்பினார்.ஒரு கட்டத்தில் மலிங்கவிற்கு   பாடம்புகட்டகூட ஸ்ரீலங்கா கிரிக்கெட் தயாரானது.

இப்படியிருந்தவர் இப்போது மாலைகள் போட்டு மகுடம் சூட்டி அலங்கரித்து அர்ஜுனா ரணதுங்கவிற்கு அடுத்த நிலையில் அழிக்க முடியாத பெயராக லசித் மலிங்க சாதித்து காட்டி விட்டார்.அணியின் நிரந்தர தலைவரான சண்டிமாலின் ஆட்டம் எடுபடாத நிலையில் ,இறுதியாக நியூஸ்லாந்து.மேற்கிந்திய தீவுகள்,இந்தியா என்று அடுத்தடுத்து மூன்று வெற்றியோடு மலிங்க தலைமையில் உலக கிண்ணமும் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.  





தொடர்ந்தும் மலிங்கவிற்கே அணியின் T20 தலைமைத்துவம் சேரப்போகிறது,முக்கிய நட்சத்திரங்கள் இனிவரும் நாட்களில் அணியில் இல்லாத  நிலையில் தரவரிசையும் தக்கவைக்க வேண்டும்,அணியையும் வெற்றிக்கு வழிநடத்த வேண்டும் எனும் சவால்கள் காத்திருக்கின்றமை உண்மையானதே.

இலங்கை கிரிக்கெட்டின் இருபெரும் தூண்கள்,கனவான்கள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சங்ககார மற்றும் மஹேல ஆகியோர் ஒரே நாளில் இருபதுக்கு இருபது  போட்டிகளில் அறிமுகமாகி ஒரேநாளில் உலக கிண்ணத்தையும் வென்ற பெருமையோடு போட்டிகளுக்கு விடைகொடுத்தமை அபூர்வ சாதனையே.
இவர்கள் இருவரும் சாதனை மகுடத்தோடு விடைபெற்றமை எல்லோருக்கும் அளவில்லா  சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.



விமான நிலையத்திலிருது தங்கத்தோடு வந்த சிங்கங்களுக்கு ரசிகர்கள் ஆரவார கரகோஷம் கொடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலிமுகத்திடல் வரை பேரணியாக அழைத்துவந்து
தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்தனர்.சிறுப்பு நிகழ்ச்சியும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதுகிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு போனஸ் அடங்கலாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் 9 கோடி பரிசுத்தொகையை அறிவித்தது.இப்போது ICC யின் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத்தொகை என்று பாராட்டு மழையோடு பரிசுமழையும் வந்து குவிகிறது

இப்படியிருக்க இந்தியாவில் மட்டும் நிலைமை தலை கீழாகிவிட்டது  .
வெற்றியோ ,தோல்வியோ விருப்புடன் வரவேற்பது இலங்கையர் பண்பு,
ஆனால் இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி சிறுபிள்ளைதனமாய் நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் நகைப்புக்குரியது.

இந்திய அணியின் வீரர்கள் ஓட்டங்களை வேகமாக குவிக்க முடியாமைக்கு இலங்கையின் நேர்த்தியான இறுதி நேர திட்டமிடலும்,பந்துவீச்சும் காரணமானது,ஆனாலும் அடித்து ஆட வேண்டிய யுவ்ராஜ் பந்துகளை வீணடித்தார் என்பதுதான் இந்தியர்களின் வேதனை இதனால்தான் இன்னுமொரு கிண்ணம் கிடைக்கவில்லை என்பது அவர்கள் கவலை.


நியாயம் இருக்கிறது ஒருபுறத்தில் விராட் கோலி வெளுத்துவாங்க மறுபுறத்தில் யுவ்ராஜ் மந்தமாக செயற்ப்பட்டார். ஆனாலும் இந்தியாவுக்கு எத்தனையோ சாதனை வெற்றிகளை பெற்றுகொடுத்த ஒரு போராட்ட வீரனை ஒரு போட்டியின் பெறுதிக்காக வெறுத்துவிடுவது என்பது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு   நல்லது அல்லவென்பதே பலரது கருத்தாகிறது.

பாராட்டுக்கள் ஒருபுறம் பழிச்சொற்கள் ஒருபுறம் என்று 5 வது உலக கிண்ணம் நிறைவுக்கு வந்திருக்கிறது.5 உலக கிண்ணங்களையும் வெவ்வேறு நாடுகளே கைப்பற்றியிருக்கின்றன.இதைவிடவும் 2009 ம் ஆண்டிலிருந்து போட்டியை நடத்திய நாடு அடுத்து வந்த உலக கிண்ண ஆட்டங்களில் வாகை சூடிய வரலாறும் சுவாரஸ்யமே.

இங்கிலாந்து,மேற்கிந்தியதீவுகள்,இலங்கை என்ற வரிசையில் இம்முறை போட்டியை நடத்திய வங்கதேசம் அடுத்த உலக கிண்ணத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கையும்  வங்கதேச  ரசிகர்களுக்கு இருக்கிறது.இப்படியெல்லாம் இருக்க நாட்டுக்குள்ளேயே நாலாபுறமும் சண்டை நடக்கிறது.அது ரசிகர்களுக்கிடையில்.வெட்டி பேச்சுக்களும் விதண்டாவாதங்களும்,காழ்ப்புணர்சிகளுகளும் இப்போது அதிகரித்துவிட்டது.       

வெற்றி பெறுவது உங்கள் அணியோ,தோல்வி அடைவது மற்றவர் அணியோ அது எதுவானாலும் கீழ்த்தரமாகவும்,விஷமத்தனமாகவும் பேசுவதை இனிமேலாவது விட்டுவிடுங்கள்.

இன்னுமொருவரை சீண்டிப்பார்த்துதான் உங்களுக்கு ஒரு சந்தோசம் கிடைக்கிறதென்றால் அதுவல்ல சந்தோசம்.
அதைவிட நீங்கள் கவலையோடு இருப்பதே மேலானது.

இலங்கை அணி வெற்றி பெற்றது என்றால் அவர்கள் வெற்றி நேர்மையானது,திறமையானது,அர்ப்பணிப்பானது என்று படுகின்ற போது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாழ்த்துவதில் தப்பில்லை

நான் இந்த அணியை ஆதரிப்பது,இந்த அணியை நேசிப்பது என்பது ஒவ்வொருவர் தனிப்பட்ட ரசனை,அது அவர் தனிநபர் விருப்பம்.
அன்று பாடசாலையில் சண்டை பிடித்தோம்,இன்று அலுவலகங்களில் சண்டை பிடிக்கிறோம் ,இப்போது குடும்பத்திலும் சண்டை வருகிறது எதற்க்காக என்றால் இந்த கிரிக்கெட் ரசனையால் தான்.

ரசனை என்பது வேறு,நோக்கம் என்பது வேறு.
எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகத்தான் இருக்கிறது அது எனக்கு சந்தோசம் கிடைக்கவேண்டும் என்பதுதான்.

அதற்காக அடுத்தவனுக்கு எப்போதும் கவலையே கிடைக்கவேண்டும் என்று நினைப்பது மட்டும் தான் கேவலமானது.

கிரிக்கெட்டை நேசியுங்கள்,
விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள்..

விருப்பம் வேறாகினும் நோக்கம் ஒன்றாயின் விளையாட்டை விளையாட்டாக மட்டும் நோக்கி நேசியுங்கள்.
உங்களுக்கும் சந்தோசம் ..
உங்களோடு இருப்பவர்களுக்கும் சந்தோசமே..
   

தி.தரணீதரன்.




[Valid RSS]

0 comments:

Post a Comment