தமிழ் கூறும் நல்லுலகுக்கு தமிழில் ஒரு வலைத்தளம்.

Wednesday, August 27, 2014

இளைஞரை அறைந்ததால் பெண் கைது


அடக்குமுறை ஆணாதிக்கமா? தலைவிரித்தாடும் பெண்ணியமா? 


 யுவதி ஒருவர் வாலிபரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த வாரம் இலங்கை வாரிய பொல பிரதேசத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது.  இதன் காணொளியை  தனியார் தொலைகாட்சி ஒன்று அன்றைய தினம் இரவு செய்தியறிக்கையின் போது காட்சிபடுத்தியது.

உண்மையில் நடந்தது என்ன வென்று பார்த்தால் , 21 வயதுடைய யுவதி திலினி அமல்கா மற்றும் அவரதுநண்பி  இருவரும் வாரியபொல பிரதேச பஸ் தரிப்பிடத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று திரும்பிய வேளையில் வாசலில் நின்றுகொண்டிருந்த இளைஞர் சந்திர குமார என்பவர் திலினியை பார்த்து ஏதோ  கூற கோபம்  கொண்ட திலினி அவரது கண்ணத்தில்அறைந்த்துள்ளார்.



சம்பவத்தின் போது  அருகில் நின்று கொண்டிருந்த ஜயசிங்க என்பவரிடம் விசாரிக்க அவரோ, அந்த பெண் தம்மை காவல் துறையை சேர்ந்தவர் என்று குறிபிட்டதாகவும் , இடை விடாமல் அந்த இளைஞரை 45 நிமிடங்களுக்கு மீள் அறைந்ததாகவும் தடுக்க சென்ற ஜெயசிங்கவையும் கோபத்தோடு ஏசியதாகவும்  தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து  சம்பவம் தொடர்பான காணொளி  தொலைக்காட்சி ஊடகங்கள் இணையம் என்பவற்றில் மிக வேகமாக பரவியதுடன் அது தொடர்பில் பல முரண்பாடான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றன


இன்று குறித்த பெண் திலினி வாரியபொல காவல்துறையினரிடம் தமது சட்டத்தரணியுடன் சரணடைந்த வேளையில் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .


" முறைகேடான  வசனங்களில் என்னை திட்டியதால் நான் குறித்த இளைஞரை தாக்கினேன். அவருக்கும் எனக்கும் எதுவித முன் விரோதமும் இல்லை, பஸ் தரிப்பிடத்தில்பொதுமக்கள் முன்னிலையில் எனக்கு ஏற்பட்ட அநீதியை அனைவரும் அமைதியாக பார்துகொண்டிருந்தனரே  தவிர எனக்கு உதவ யாரும்  முன் வரவில்லை" என தம் பக்கத்து நியாயத்தினை திலினி காவல் துறையினரிடம் தெரிவித்தாக அறியப்படுகின்றது.

வாரியப்பொலயை வசிப்பிடமாக கொண்ட R.C.சந்திரகுமார தான் சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர், இது தொடர்பில் அவரோடு பேசிய போது அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர், 

"அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நான் அவரிடம், ' மிஸ் இந்த ஆடை உங்களுக்கு பொருந்தவில்லை, நல்லா இல்லை' என்றேன். உடனே அப்பெண் அது உனக்கு தேவையில்லாத விடயம் என்று கூறிவிட்டு வேகமாக பஸ்சில் ஏறினார், நான் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக்கண்டு மீண்டும் இறங்கி வந்து, எனக்கு என்னைப்பற்றி, என் ஆடையை பற்றி சொல்ல நீ யார் என்று கேட்டு, தொடர்ந்து திட்டிக்கொண்டு, கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் தொடர்ந்து தாக்கினார். பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைவது தவறான ஒரு செயல் என்பதால் நான் தலையை குனிந்து நின்றேன்"என்றார். 


இந்த தகவல்கள் வெளியான பின் அந்த ஆண் தொடர்பில் ஒரு பரிதாப உணர்வு ஏற்பட, அந்த பெண்ணை அனைவரும் ஒரு விதமான கோப உணர்வோடு பார்க்க தொடங்கிவிட்டனர்.


இத்தனை பரபரப்புக்கும் காரணமான சர்ச்சைக்குரிய ​அந்த பெண் இது பற்றி கூறுகையில், ​"​அங்கு நடந்த சம்பவம் என்னவென்று நேரில் கண்டவர்களுக்கு தான் தெரியும், 

 நான் இணையத்தில் வீடியோ பதிவுகள் மற்றும் செய்திகளைப் பார்த்தேன், எனக்கு ​மி​கவும் கவலையாக இருந்தது, அதிகமான இளைஞர்கள் என் மேல் கோபமாக உள்ளனர், அவர்கள் கோப​ப் ​படுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை​"​ என கூறினார்.

இப்பெண் சரமாரியாக தாக்கும் போது எதுவுமே பேசாமல் அந்த நபர் நிற்பதைப் பார்த்தால், ​அந்த இளைஞன்​ தரப்பிலும் ஏ​தோ​ தவறுள்ளது போல் தான் இருக்கிறது எனவும், பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இந்த நடவடிக்கையானது ஒரு பெண் தனக்கு எதிரான அபாயங்களின்போது‬ தன்னை தற்காத்துக்கொள்ளும் மனித‬ உரிமைக்கு எதிரான அடக்குமுறை‬ மற்றும் மனித உரிமை மீறல் , இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம் என்றால் அது மிகையல்ல என ஒரு தரப்பினர் கூறி வரும் அதே வேளை , அந்த பெண்ணின் மீது  ஆடவர் ஒருவரை பலருக்கு முன் வைத்து தாக்கியதை கண்டித்து பலரும் கோப கனல்களை வீசி இது தலைவிரித்தாடும் பெண்ணியம் என  கூறி  இருப்பதுவும் அறியக்கூடியதாகவும் உள்ளது .  


எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் இரு பக்கமும் சம நியாயங்களும், தவறுகளும்  உள்ள நிலையில் பெண்ணியமா ஆனாதிக்கமா  என வாதிடுவதை தவிர்த்து உரிய நியாயத்தினை  உயரிய பண்போடு எடுத்து இயம்புவது சால சிறந்தது.






Wednesday, August 20, 2014

தத்தளிக்கும் தமிழ் சினிமா - சினிஆய்வு 03




இங்க டிரெய்லர் மட்டும் தான் ஓடுமா?


2014 ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களை விட அதன் டிரைலர்களும், ஆடியோ ரிலீஸ்களும் இதர பிற நிகழ்வுகளுமே திரைப்படங்களை பேசவைத்தது. அவ்வாறே எதுவித ஆர்பாட்டங்களும் இன்றி படம் வெளிவந்த பிறகு அதன் கதைக்களம் , நடிப்புதேர்ச்சி  என நெகிழவைத்த தருணங்களும் உள்ளன.

கடந்த பதிவில் வருடத்தின் முதல் நான்குமாத வெளியீட்டு விபரங்களும், படங்களின் நிலைகளும் ஆராய்ந்து பார்த்தாச்சு, இனி மிச்சமுள்ள நான்கு மாத நிலையை நாசூக்காக பார்போமா ?


மே  : - வெளிவந்த மொத்த திரைப்படங்கள் 13,  பல எதிர்ப்புகளுக்கும் பலரது எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வெளிவந்தது கோச்சடையான் .  மோஷன் கேப்சர்  படமெடுத்து மோசம் போனார் தலைவரின் சின்ன மகள். ஏதோ மே  மாதம் பள்ளிகளுக்கும் பாடசாலைகளுக்கும் விடுமுறை என்பதால் சிறுவர்களுக்கான படமாக மாறி கார்டூன் படமாக கருதப்பட்டது எனினும் வரவு எட்டணா செலவு பத்தணா என மாறியது பட வருமான நிலைமை. தலைவரை தலை தூக்க விடாமல் கடன்களும் தோல்விகளும் தலைவிரித்தாடும் நிலை .

 இந்தியில் சக்கை போடு போட்ட  ' கஹானி' திரைப்படத்தின் தழுவலாக வெளிவந்தது சேகர் கமுலாவின் இயக்கத்தில் வெளிவந்தது "நீ எங்கே என் அன்பே" திரைப்படம் நயன்தாரா , வைபவின் நடிப்பில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு ஏதும் பண்ணலைங்க . (இப்படி ஒரு படம் வந்ததா? என்று யாரும் கேட்கலை தானே?!)


கொமடி கிங் சந்தானம் ஹீரோவாக டிரை பன்னிய  படம் ' வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்னதான் பாட்டு, டான்ஸ் என்று முயற்சி செய்தாலும் கொமடி பீஸ்  என்று அவரை பச்சைகுத்தாமலே   அடையாள படுத்திவிட்டது திரைப்படம் .

கிருஷ்ணாவின்  நடிப்பில் வெளியான "யாமிருக்க பயமே", மற்றும் "பூவரசம் பீப்பி" ஆகிய படங்கள் ஒரளவு பேசப்பட்டன , அதிருல் காமெடி திரில்லர் யாமிருக்க பயமே அசராமல் அசத்திவிட்டு போனது எனலாம்.


ஜூன்  : - வெளிவந்த மொத்த திரைப்படங்கள் 16.  நீண்ட நாட்களுக்கு பின் பிரகாஷ்ராஜ் இயக்கி, நடித்து வெளியிட்ட படம் "உன் சமையல் அறையில்" படத்தின் பெயரைப்பார்த்து  இசைஞானி பழைய மசாலா வாசியுடன் இசை அமைத்தமை அவரது ரசிகர்களுக்கு அதிருப்தி தந்தது. நல்ல வித்யாசமான கதையம்சமும், தீர்ந்த நடிகர்களின் இனையற்ற நடிப்பும் படத்தை பார்த்துவிட்டு வெளியீவரும் ரசிகர்களுக்கு திருப்தியாக  சாப்பிட்ட உணர்வை தரவில்லை என்றாலும் பசியாறிய பீலிங்கை தந்தது என சொல்லலாம்.


இது தாத்தாக்களுக்கு தகுந்த காலம் போலும் , "மஞ்சப்பை" "சைவம்" ஆகிய திரைப்படங்கள் தாத்தா செண்டிமெண்டை மையமாக கொண்டு சக்கை போடு போட்டது, அதிலும் நம்ம முனி தாத்தா ராஜ்கிரனின் வெகுளித்தாமான நடிப்பு இப்படி ஒரு தாத்தா நமக்கில்லையீ என பலரையும் ஏங்க வைத்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படங்களில் தலை காட்டினார் சின்ன கலைவாணர் விவேக் . " நான் தான் பாலா " மூலம் நகைச்சுவை இன்றிய அமைதியான அய்யங்கார் ஹீரோவாக அவரது நடிப்பில் புதுமை செய்திருந்தார்  என்பது பாராட்டத்தக்க விடயமே.


நந்தா, அனன்யா  நடிப்பில் வந்த " அதிதி " பார்க்கும்படியான திரில்லர் படம். அத்துடன் " சொல்ல சொல்ல " பாடல் கேட்கவும்  வைத்தது.

விஷ்ணுவிஷால் நடிப்பில் " முண்டாசுபட்டி", ஜெய், சுவாதி ஆகியோரின் நடிப்பில் "வடகறி" விமல், பிரசன்னாவின் நடிப்பில் " நேற்று இன்று ", நிதின் சத்யாவின் நடிப்பி " என்ன சத்தம்  இந்த நேரம் " ஆகிய படங்கள் பேசவைத்த பேசும் படங்கள். இயக்குனருக்கு கையை கடிக்காமல் சமத்தாக ஓடிய படங்கள் இவை.

ஜூலை  : - வெளிவந்த மொத்த திரைப்படங்கள் 11, கணித தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான மாதம் எனலாம். நல்ல படங்கள் பூட்டி போட்டுக்கொண்டு வெளியான மாதம், கணித மேதை  ராமானுஜரின் வாழ்கை சரிதம் சொன்ன " ராமானுஜன் " அனைவரும் பார்த்து பெருமிதப்படவேண்டிய  படம்,

நாம் சொல்லும் ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை இருக்கும் ஒவ்வொரு உண்மையிலும் சில பொய்கள் இருக்கும் என கருத்தினை சொல்லி படம் பார்க்கவந்த ரசிகர்களையே குழப்பி இருக்கும் படம் " சதுரங்க வேட்டை " பணத்திற்காக பணத்தாசை பிடித்தவரிடமே பணம்கறக்கும் யுக்தி பலே பலே .


தனுஷின் 25 ஆவது படமான ' வேலையில்லா பட்டதாரி " இந்த வருட பிளாக் பாஸ்டர் ஹிட் தந்தது,டி .ஆர். க்கு அடுத்த படியாக இயக்கம் , பாடல், லிரிக்ஸ் என தன்னை நம்பி சபாஸ்போட  வைத்திருக்கிறார் தனுஷ்.

திருமணம் எனும் நிக்காஹ்  , பப்பாளி, சூரன், நளனும் நந்தினியும் , இருக்கு ஆனால் இல்லை ஆகிய படங்களுக்கு கதை இருக்கு ஆனால் வருமானம் இல்லை.


ஆகஸ்ட்  : - போனவாரம் வரைவரை 9 படங்கள் வெளியான நிலையில் ஜிகர்தண்டா புழுதி பறக்க வைத்துள்ளது சூர்யாவின் அஞ்சான் , பார்த்திபனின் இயக்கத்தில் ' கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் , " ஆகிய படங்கள் வெளிவந்து ஒரு வாரமான நிலையில் நல்ல ரிசல்டை காட்டி உள்ளது..

ஆனாலும் இனி வரும் காலத்தில் இந்த நிலவரம் மாறலாம் .. மாறாமலும் போகலாம்... எதுக்கும் வெயிட் பண்ணிதான் பாருன்களீன். !.


வரவிருக்கும் படங்கள் 

ஆயிரம் தோட்டாக்கள் - கௌதம் மேனன்

காவிய தலைவன் - வசந்த பாலன்,

ஐ -  சங்கர்

கத்தி - ஏ .ஆர். முருகதாஸ்

லிங்கா - கே,எஸ்.ரவிகுமார்



இந்த வருடத்தில் (இதுவரை ) மறைந்த சினிமா பிரபலங்கள் 

உதய் கிரண் - நடிகர்

அஞ்சலி தேவி -பழம்பெரும்  நடிகை

பாலு மகேந்திரா - இயக்குனர்

லொள்ளு சபா பாலாஜி - நகைச்சுவை நடிகர்

தெலுங்கானா சகுந்தலா (சொர்ணாக்கா ) - நடிகை

காதல் தண்டபானி - நடிகர்,

இராம.நாராயணன் - இயக்குனர்

ஏ .சீ.முரளி - சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்

சுருளி மனோகர் - நகைச்சுவை நடிகர்












Monday, August 18, 2014

தள்ளாடும் தமிழ் சினிமா - சினி ஆய்வு 02



மரண மொக்கை படங்களும், மறக்க  முடியா சக்கை போடுகளும் .




கடந்த பதிவில் 2014 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் வெளிவந்த தமிழ் படங்கள் தொடர்பில் மேலோட்டமாக தொட்டும் தொடாமலும் பார்தாச்சு..  இனி ஜனவரி முதல் ஏப்ரல் வரையான முதல் நான்கு மாதத்தில் ஒவ்வொரு மாசமும் வந்த படங்கள் வராத படங்கள் , தியேட்டரை விட்டு ஓடிய படங்கள், தியேட்டரையும் வெளியீட்டாளர்களை ஓட்டிய படங்கள்  என பிரிச்சு மேயலாம் வாங்க..


ஜனவரி
: - வெளிவந்த மொத்த படங்கள் 18 . அதிலும் 'கோலிசோடா', 'ஜில்லா', 'வீரம்' 'ரம்மி', 'நினைவில் நின்றவள்', 'இங்க என்ன சொல்லுது', 'மாலினி - 22 பாளையம்கோட்டை" ஆகிய படங்கள்  பேசப்பட்டன. அதிலும் பிக்கு ஸ்டார் , டொக்கு கொமண்ட்ஸ் எடுத்து எதிர் பார்க்கவைத்து ஏமாற்றமளித்த படங்களில் தளபதிக்கு முன்னுரிமை, அதிலும் சிம்புவின் மரண மொக்கையுடன் குறலழகர் கனேஷ் நடித்த 'இங்க என சொல்லுது' படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் "இனிமேல் சிம்பு பக்கம் தலை வச்சு படுப்ப/!?"  என்று தம்மைத்தாமே காரி துப்பிக்கொள்ளும் அளவுக்கு திரைக்கு வந்து சில நாட்களிலேயே  சன் டி.வி,யில் போட்டுத்தாக்கியது சத்தியமாக "டமில்" சினிமா ரசிகர்களால் மறந்திருக்க முடியாது.

இதில் ரம்மி படத்தின் இசையும் பாடல்களும் படத்தை பேசவும் ஓடவும் வைத்தது என சொல்லுவோம், குறிப்பாக "கூடமேல " பாடல் 2014 ஆம் ஆண்டின் மெலடி ஹிட்டில் தனியிடம் பிடிக்கும்.


பெப்ரவரி : - வெளிவந்த மொத்த படங்கள் 18. "பண்ணையாரும் - பத்மினியும்",  " தெகிடி " ஆகிய  படங்களும் நல்ல வரவேற்பையும், பலத்த லாபத்தையும் பெற்றுதந்த "சின்ன கல்லு, பெத்த லாபம்" வகையை சாரும் .


மலையாள படமான 'சப்பா  குரிஷு " வை தழுவி தமிழில் வெளிவந்த படம்
 " புலிவால்" விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா ஆகியோரின் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம். படத்தின் படம் ஒரளவு கதைக்காகவும், விமல், பிரசன்னாவின் நடிப்புக்காகவும் பேசப்பட்டாலும் படத்தை தமிழில் தயாரித்த ராதிகா சரத்குமாருக்கு  படத்தின் தலைப்பை   பொருந்தும் வகையில் புலி வாலை  பிடித்த கதை என்ற நிலையாகிபோனது.

நகுலின் 'வல்லினம்', சசிகுமாரின் 'பிரம்மன்' ஆகிய படங்கள் சரிவர ஓடவில்லை, அத்துடன் நானியின்  'ஆஹா கல்யாணம் ' பெரிதாக இலாபம் தராவில்லை. வட  இந்திய மசாலாவை அள்ளி தெளித்து இருப்பது கண்னுக்கு  கொடுமை. எனினும் இசையமைப்பாளர் தரன் குமாரின் பின்னணி இசையும் 'மழையின் சாரலில் ' பாடலும் காதுக்கு இனிமை.


அரைத்த மாவையே மீண்டும் அரைத்து  ரசிகர்களுக்கு விருந்து வைக்க முயற்சி செய்துள்ளது உதயநிதி - சந்தானம் கொம்போ. தொட்டுகொள்ள ஊறுகாய் பூல இடையில் சொருகிவிடபட்டுள்ளார் நயன்தாரா . ரெட் ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில் வெளியான "இது கதிர்வேலன் காதல் ' படமும் சரி , ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் சரி.... சொறி சொறி புளித்தமாவயும் விஞ்சியது .

மார்ச் : -  வெளிவந்த மொத்த படங்கள் 17,  'அட்டகத்தி' தினேஷ் தமது வித்யாசமான நடிப்பில் பெரும் வெற்றியை அள்ளிகொண்ட படம் ' குக்கூ'
அவ்வாறே, அறிமுகமில்லாத புதுமுகங்களின்  நடிப்பில் பேசப்பட்டது ' நெடுஞ்சாலை'.


ஜெயம் ரவிஅமலா பால் ,  நடிப்பில்  சமுத்திர கனி இயக்கிய படம்  நிமிர்ந்து நில்,. ஓரளவு பேசப்பட்டது. இவ்வாறே ஒளி ஓவியர் சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் வெளியான இனம், மற்றும் விரட்டு ஆகிய படங்களும் பேசப்பட்ட பேசும் படங்களாக பேசிக்கொள்ளலாம் .


ஏப்ரல் : -  வெளியான படங்கள் 15 , வைகை புயலுக்கு ரீ என்றி  தந்த  படம் தெனாலி ராமன். அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.இம்சை அரசன், இந்திர லோகத்தில் நா.அழகப்பன் போன்ற அவரது படத்தை திரும்ப பார்கிறோமோ என்று ரசிகர்கள் சலித்துகொள்ளும் அளவுக்கு இருந்தமை படத்திற்கு மைனஸ். ஆனாலும் வைகைபுயல் நகைச்சுவையில் விளாசியிருப்பதால்  படம் ஓரளவு இலாபம் பார்த்தது.

குடும்ப பெண்களினதும் குட்டீஸ்களினதும் இப்போதைய ஹீரோ நம்ம சிவ  கார்திகேயன்  தான் . ஹாட்ரிக் நாயகனாக வளம் வந்த இவரின் மான் கராத்தே மானை போல்  ஓடவில்லை, அனிருத்தின் இசை ஓஹோ, குறிப்பாக குட்டீஸின் தேசிய கீதம் இந்த ஆண்டு டார்லிங்கு டம்பக்கு ....

விஷாலின் ' நான் சிகப்பு மனிதன்', வாயைமூடி பேசவும் , வைபவின் டமால் டுமீல் வெற்றிகளை தந்த படங்களாக சொல்லலாம் , அவ்வாறே கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படம் 'என்னமோ ஏதோ ' சத்தியமாக ஏனோ  தானோ.

அடுத்த நாலுமாத பார்வை அடுத்த பதிவில் தொடரும் 









கடந்துவந்த அரையாண்டில் ஆட்டம் கானும் கோலிவூட் - சினி ஆய்வு 01






2014 ஆம் ஆண்டின்  முதல் பாதியை ஏப்பம் விட்டு மறு பாதிக்காக  விழி பிதுங்கி காத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த ஆண்டில் இதுவரை தமிழ் சினிமா கடந்து வந்த பாதையை ஒரு நோட்டம் விட்டு பார்ப்போமா?



கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டின் தமிழ் சினிமா நிலவரத்தினை பார்த்தால்  மிகவும் ஆரோக்கியமான படைப்புக்களை தாங்கி தமிழ் சினிமாவின் தரத்தினையும் ரசிகர்களின் ரசனை மாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தமையை இங்கு சுட்டி காட்டியே  ஆக வேண்டும்  .

மிகவும் குறைந்த பட்ஜட் , அறிமுகமில்லா புதுமுகம், சைலண்டாய் வந்து சக்கை போடு போட்டு  சென்ற படங்கள் என பெருமிததோடு  சொல்லிக்கொள்ளலாம் கடந்த கால கோலிவுட் சினிமா நிலவரத்தினை. அத்தோடு பெரும் பொருட்செலவில் பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாக்கத்தில் பலத்த எதிர்பார்ப்போடு வந்த படங்கள் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தினையும் கொடுத்து விட்டு சென்றது இந்த காலங்களில் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

பார்க்க போனால் தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் தலைநிமிர வைக்கும் அளவு மேலோட்டமான  ஆரோக்கிய நிலை தென்படுகிறது என உறுதியாக கூற முடியாது. ஒட்டுமொத்த பிரபல  இந்திய சினிமா  தளங்களுடன் (பாலிவுட், டோலிவுட் மொலிவுட் ) ஒப்பிடும் போது  கடந்த 2014ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் 103 திரைப்படங்கள் நம்ம தமிழ் கோலிவுட்டில் வெளியாகியுள்ளமை ஒரு சாதனை என சொல்லப்பட்டாலும் படங்களின் வருமானம், ஏனைய நிலவரங்களுடன் ஒப்பிடும் போது  இது ஒரு "தொய்வான தொங்கு நிலைமை" என்றே  குறிப்பிடுகின்றனர் .

துண்டு போட  வைத்த பெரிய தலைகள் 

வருட ஆரம்பத்திலேயே  பலத்த எதிர்பார்புக்களை தூண்டிய படங்கள் தலையின் " வீரம்" மற்றும் தளபதியின் " ஜில்லா". முட்டி மோதி கொள்ளும்  அஜித் - விஜய்  ரசிகர்களின் பேர் எதிர்பார்ப்புக்களை சுமந்து பொங்கல் வெளியீடாக வந்தது இப்படங்கள். ஆனாலும் மாபெரும் வெற்றியினை இரண்டு படங்களும் எட்டவில்லை , ஒப்பிடும்போது  தளபதியின் ஜில்லா வை விட தலையின் வீரம் வருமானம் சார் நிறைவினை தந்தது என ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

இது தொடர்பில் தமிழ்நாடு திரை இயக்குனர்கள் சங்க தலைவர் கேயார் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இரு படங்களும் பேரளவில் பெற்றிருந்தாலும் கேளிக்கை  வரி விலக்கிற்கான தகுதியினை இவ்விரு படங்களும் பெற தவறியமை குறித்து சுட்டி காட்டியுள்ளார்.

அவ்வாறே முதலீட்டாளர்களின் கையை இந்த இருபடங்களும் கடித்தமை சுட்டி காட்ட வேண்டும். போட்ட  முதல் திரும்ப கிடைக்காமையை இந்த இரு பிரபல நட்சத்திர படங்களும் தமாதாக்கியமை கொடுமை.. கொடுமை...


இந்திய சினி வரலாற்றில் முதன் முறையாக என்ற  தலைப்போடு ஹையர் பட்ஜெட் , நிவ்  டெக்னாலஜி , மோஷன் கேப்சர் என்று எல்லாவற்றிலும் மிதமிஞ்சியதாக வெளியான படம் "கோச்சடையான் "  . "தமிழ் சினிமா தலீவர் படமுன்னா  எல்லாமே கிரேண்டு தான் . அவர வச்சு அவரு பொண்ணு சௌந்தர்யா அஸ்வின் என்னென்னமோ வெளாட்டெள்ளாம் காட்டிச்சு ப்பா  ..தலைவரை சும்மா நடக்க (நடிக்க) வச்சு   பார்த்தாலாவது நல்லா இருந்திருக்கும்!" என்று ரசிகர்களுக்கு  சலிப்பையும் ஏமாற்றத்தையும் இந்த படம் தந்ததுவே மிச்சம்.


"சின்ன கல்லு பெத்த லாபமுலு "

கமலின் பஞ்ச தந்திரம் படத்தின் வசனத்தை  போலவே குறைந்த செலவில் சத்தம் போடாமல் வந்த படங்களே  சாதனை படைத்தது . தனித்தனியே நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், என்று அவர்களை மட்டும்  நம்பி படம் பார்க்க வந்த காலம் மலையேறி போச்சு .

விளம்பர ஆக்கிரமிப்பு, வெளியீட்டாளர்களின் வஞ்சனை என்று எதுவித பின் புலமும் இல்லாமல் நல்லகதை, தேர்ந்த நடிப்பு எளிய இசை என்று புதியவர்களை அவர்களின் திறமைகளை மட்டுமே கருதி ரசிகர்களை ரொம்ப நாளைக்கு அப்புறமா நல்ல படம் பார்த்தோம்  என்ற திருப்தியை பல படங்கள் தந்தது,



சின்னபசங்களை கொண்டு கதைக்களம் அமைத்து டிரைலரிலேயே  டி .ஆர். பாட, பவர்ஸ்டார் ஆட, சாம் ஆண்டர்சன் நடனத்தை இயக்க என்று கலக்கல் காம்பினேஷனுடன் ஆர்வம்மிக்க பொழுது போக்கு அம்சங்களுடன்  வெளிவந்து வெற்றியீட்டிய  படம் கோலி  சோடா  .

திரில்லர் கதையம்சம் , அழகான அசோக் செல்வன் துடிப்பான ஜனனி ஐயர் என்று கதையின் கடைசிவரை கண்ணிமைக்காமல் பார்க்கவைத்த படம் "தெகிடி" படத்தில் இசையும், "விண்மீன் விதையில்" , "நீ தானே" ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட். .

இது திரில்லர் பிலிம்மா இல்ல கொமடி பிலிம்மா? என வடிவேலு பாணியில் டவுட்டு கேட்க வைத்த படம் " யாமிருக்க பயமே " கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரியின் மாறுபட்ட பயத்தில் நமக்கே பயத்துடன் கலந்த சிரிப்பினை படம் முழுதும் கொண்டு சேர்த்த  படம்.

நடிகை ஸ்ரீப்ரியா  இயக்கத்தில் மலையாள திரைப்படத்தின் தழுவலாக வெளிவந்த படம் "மாலினி - 22 பாளையம் கோட்டை" அவலத்திற்குள்ளான  பெண் ஒருத்தியின் கோபத்தில் குமுறல் படம். பேசவைத்தது.

இந்த வருடம் இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான ' திருப்தி பிரதர்ஸ்' வசூல் சாதனை புரிந்தவர்கள் என சொல்லலாம். " குக்கூ, மஞ்சப்பை, முன்டாசுபட்டி, மற்றும் சதுரங்க வேட்டை  ஆகிய படங்களை வெளியிட்டு  சத்தமில்லாமல் இல்லாபத்தை சுருட்டிகொண்டது.

இவ்வாறு கடந்த 8 மாதத்தில் வெளியான படங்கள், வெளிவராத படங்கள், பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்போமா?

...தொடரும் (நமக்கில்லை எண்டு கார்டு ... )












Friday, August 15, 2014

"இட்லி" மேடத்தின் பப்ளிசிட்டி மோகம்.






தற்போதெல்லாம்  "இட்லி" அடைமொழிக்கு பொருந்தும் வகையில் இருக்கும் நடிகை குஷ்பு சுந்தர் சில அதிரடியான அறிக்கைகளையும் கருத்துக்களையும் பதிவுசெய்து வருவதனால் பப்ளிசிட்டி பெருந்தகை ஆகிறார் . அவ்வண்ணமே இவர் அன்மையில் ஊடகங்களில் வெளியிட்டுள்ள இரு வேரு கருத்து பகிர்தல்கள் தாம் இப்போதய சுடச்சுட செய்திகளாக இந்திய ஊடகங்களில் உலா வருகின்றது.




சமீபத்தில் பி.கே என்ற இந்தி படத்தில் நடித்துள்ள அமீர்கான், அந்த படத்தின் பப்ளிசிட்டியை கருத்தில் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். ஒரு முன்னணி நடிகரே இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்ததால் இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதனால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.




ஆனால்,  விசாரணைக்கு வந்த அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அதோடு, சினிமா என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது. அதனால் அதற்கு தடை விதித்தால் படத்தை தயாரித்திருப்பவர் பாதிக்கப்படுவார். இந்த படத்தை பார்க்க விருப்பம் இல்லையென்றால் அதை பொதுமக்களே நிராகரிக்கட்டும். மேலும், இதில் தேவையில்லாமல் மதத்தையும் புகுத்த வேண்டாம் என்றும் சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.



இதை திரையுலகைச்சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், நடிகை குஷ்புவும் அதை வரவேற்றுள்ளார். கலையை மதித்து சினிமாத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என தெரிகின்றது.

அவ்வாறே, திரைப்படங்களில்  நடிகர்கள் சிகெரட் குடித்தால் என்ன தவறு? என்று நடிகை குஷ்பு   கருத்தினை தெரிவித்துள்ளார் என அறியப்படுகின்றது .



சமீபத்தில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி, மற்றும் ஜிகிர்தண்டா படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற சமூக சீர்கேடான காட்சிகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது



மேலும் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



அதேபோல ஆமிர்கான் 'பி.கே' படத்தின் நிர்வாண போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அப்படம் வெளியிட தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:


""வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'பி.கே' படங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை வழக்குகளை தள்ளுபடி செய்து, ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.







ஒரு நடிகர் நல்லது செய்யும்போது, அதனை யாருமே பின்பற்றுவது இல்லை. ஒரு நடிகர், ஏழைகளுக்கு உதவுவது, நன்கொடைகளை வழங்குவது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றை செய்கிறார். அதையெல்லாம் யாரும் பின்பற்றாதபோது, சிகரெட் பிடிக்கும் விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்வது எந்த வகையில் சரி?" என்று கருத்துகளை பதிந்துள்ளார்.


இவ்வாறு தமது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைமீகு டிவிட்டுக்களை  அனேகரின் வெறுப்பையும்  வருகின்றமை குறிப்பிடப்பட வேண்டியதே .





ஆக, திரையில் தோன்றி நடிப்பினை சிறப்பாக  வெளிக்காட்டி பலராலும் பேசப்பட்ட இவர் இன்னும், இன்றும் பேசப்படுவது ஆச்சர்யப்பட வேண்டிய  ஒன்று அல்லவே!.


Thursday, August 14, 2014

எபோலா எனும் எமன்





இன்றைய காலக்கட்டத்தில் உலக நாடுகளையும் மக்களையும் பல்வேறு கொடிய விஷயங்கள் அச்சுறுத்தி வரும் நேரத்தில் அதற்கு மேலும் மெருகேற்றுவது போல  ஒருவித ஆட்கொல்லி கொடிய நோயின் பீதியும் மக்களை கதிகலங்கச் செய்து வருகின்றது. ஒருபுறம்  அதிகரித்து சென்றுகொன்டிருக்கும்  சனத்தொகையினை மறுபுறம்  பசி, போர், வரட்ச்சி என்பனவுடன் இவ்வகை ஆட்கொல்லி நோய்களும்  மக்கள் தொகையினை பேரளவில் குறைத்துக்கொன்டும் செல்வது விபரீத வினேதமே.



எபோலா - யார் இந்த எமன் ? 

எபோலா வைரஸ் நோய் முன்னதாக எபோலா காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் வந்தால் 90 சதவீதம் மரணத்தில் முடியும். இந்த நோய் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவக்கூடியது.


எபோலா - கண்டது எப்போது?



கடந்த 1976 ஆம் ஆண்டு ஆபிரிக்க கண்டத்தில் உள்ள  கொங்கோ நாட்டின் எபோலா நதிக்கைரைக்கு அன்மித்த இடத்தில் முதன் முதலாக இணம்கானப்பட்டதாக அறியப்படுகின்றது . அத்துடன் சூடானிலும் இன்நோய் அறியப்பட்டது. அச்சமயம் இந்த நோய்க்கு சுமார் 228 பொதுமக்கள் பலியானதாக அறியப்படுகின்றது. எபோலா நதிக்கரைக்கு அன்மையில் கண்டறியப்பட்டதால் இந்த புதுவித நோய்க்கு எபோலா என்ற பெயர் இடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் இந்த எபோலா நோய் ஆபிரிக்க காடுகளில் வாழ்ந்த பிரைமேட்ஸ் எனும் குரங்கு இணங்களின் மூலமாகவும், முள்ளம்பன்றி, வொளவால்கள், சிம்பன்சி குரங்குகள் மூலமாகவே மனிதருக்கு பரவியதாகவும் அறியப்படுகின்றது. 



அறிகுறிகள்.



இந்த நோய் பெரும்பாலும் சாதாரண தலைவலி, தடிமன் காய்ச்சலை அறிகுறியாகக் கொண்டது . நோய் பாதிக்கப்பட்ட முதல் 21 நாட்களுக்குல் அதன் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு நோயின் அறிகுறிகள் தென்படும் வரையில் இது ஏனையோருக்கு பரவாது என தெரிவிக்கப்படுகின்றது.




எபோலா காய்ச்சல் சாதாரண தடிமன் காய்ச்சல் பரவுவதை போல மிக இலகுவாக பரவக்கூடியது அல்ல. மாறாக இந்த நோய் தாக்கப்பட்டவரின் இரத்தம், எச்சில், சிறுனீர் என்பவற்றை மற்றயவர் தொடும் சந்தர்ப்பதிலேயே இந் நோய் பரவும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளாது.அவ்வாறே எபோலா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவரின் இறுதிச்சடங்கில் அவரது உடலை தொட்டு கையாளக்கூடியவக்களுக்கே இந்த நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக அறியப்பட்டுள்ளது.






மாறாக வளி, நீர், உணவு என்பவற்றில் இந்த நோய் பரவுவதும் இல்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

காய்ச்சல் பீடிக்கப்பட்டு 21 நாட்களுக்கு பின்னை தலைவலி , உடல்வலி, வாந்தி, பேதி, இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகளை காட்டும் என தெரிகின்றது.

இந்த நோய் பீடிக்கப்பட்டவருக்கு 90% மரணம் ஏற்படும் என்பதில் மறுப்பதிற்கில்லை என்கிறது மருத்துவ உலகு.





 
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் தாக்கி உயிர்பலி ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 1069 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் 56 பேர் பலியாகி உள்ளனர். 128 பேரை புதிதாக நோய் தாக்கியுள்ளது. நோயை கட்டுப்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பெரிய பலனை தரவில்லை. எனவே ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபிரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவரும் என மொத்தம் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் எபோலாவினால் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. 

இதற்கிடையே எபோலா நோய் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவும் ஆபத்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினமும் 70 விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு வருகிறது. இவற்றில் பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் அடங்கும். 

இந்த விமான போக்குவரத்து எதையும் கென்யா ரத்து செய்யவில்லை. எனவே இவற்றின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் இந்த நோய் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. நோய் பரவாமல் தடுக்க கென்யா விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. 

இதுபற்றி கென்யாவின் சுகாதார செயலாளர் ஜேம்ஸ் மெக்காயா கூறும்போது, ‘‘மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை ரத்து செய்யும் நிலையில் நாங்கள் இல்லை. ஆனாலும் நோய் தடுப்புக்கு தேவையான அத்தனை நடவடிக்கையும் எடுத்திருக்கிறோம். எனவே எபோலா நோய் கென்யாவில் பரவாமல் பார்த்துக்கொள்வோம்’’ என்று கூறியுள்ளார். 

கென்யாவுக்கு நோய் பரவிவிட்டால் அது பக்கத்து நாடான எத்தியோப்பியா, உகாண்டா, தான்சானியா போன்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.




Table: Chronology of previous Ebola virus disease outbreaks


YearCountryEbolavirus speciesCasesDeathsCase fatality
2012Democratic Republic of CongoBundibugyo572951%
2012UgandaSudan7457%
2012UgandaSudan241771%
2011UgandaSudan11100%
2008Democratic Republic of CongoZaire321444%
2007UgandaBundibugyo1493725%
2007Democratic Republic of CongoZaire26418771%
2005CongoZaire121083%
2004SudanSudan17741%
2003 (Nov-Dec)CongoZaire352983%
2003 (Jan-Apr)CongoZaire14312890%
2001-2002CongoZaire594475%
2001-2002GabonZaire655382%
2000UgandaSudan42522453%
1996South Africa (ex-Gabon)Zaire11100%
1996 (Jul-Dec)GabonZaire604575%
1996 (Jan-Apr)GabonZaire312168%
1995Democratic Republic of CongoZaire31525481%
1994Cote d'IvoireTaï Forest100%
1994GabonZaire523160%
1979SudanSudan342265%
1977Democratic Republic of CongoZaire11100%
1976SudanSudan28415153%
1976Democratic Republic of CongoZaire31828088%

Courtesy : WHO 




Tuesday, August 12, 2014

பாரதி மனிதனா? மகானா? (மீள்பதிவு. )







அண்மைய காலமாக என்னை வெகுவாக யோசிக்க வைத்த கேள்வி இது....தமிழன் எனும் போதும், தமிழ் இலக்கிய மரபுகள் எனும் போதும் பாரதியை பற்றி பேசாதோர் யாருமிலர் என்றே கூற வேண்டும் .

ஆயினும் இவரின் படைப்புக்களை உள்ளர்ந்தமாக அலசி ஆராயும்போது அது மிகவும் சாமான்யனின் படைப்பாகவே கருதப்பட்டு வருவதாக தற்கால இலக்கிய கர்த்தாக்கள் விசனித்து வருவதே என்னால் அவதானிக்க முடிகின்றது.. இது எவ்வளவு தூரத்திற்கு நியாயமானது? உண்மையில் இந்த முண்டாசு கவிஞன் வெறும் சாமான்யனா?இல்லை சமூகவியலாளனா? இவை பற்றி கொஞ்சம் என அறிவுக்கு எட்டிய வகையில் பதிவில் பகிர்கிறேன்...




பாரதியாரின் படைப்புக்கள் தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியாக கருத முடியாது, அவரின் படைப்புகளில் வெறுமனே வேகம் மட்டுமே உள்ளது. உணர்ச்சி பிழம்பின் உச்சத்தில் அவரால் புனையப்பட்ட பாடல்களும் படைப்புகளும் இலக்கிய மரபினை கொண்டிராதது .. பாரதியின் எழுத்துகளுக்கு பின்புலம் இந்திய சுதந்திர தாகம் மட்டுமே... இவ்வளவு காலமும் தமிழ் இலக்கிய மரபுகளின் முன்னோடி இந்த முண்டாசு கவிஞன் எனும் வாதம் ஏற்புடையது அல்ல என பலர் கூறிகொள்கின்றனர்.

அந்த வகையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் விவாத பக்கம் ஒன்றில் இவை பற்றிய பல சான்று பகிர்வுகளை அவர் முன்வைத்துள்ளமையை கான கிடைத்தது.. இவை சார்ந்த பல தேடல்களை நான் செய்யும் பொழுதே இலங்கை தமிழருக்கும் இந்த விவாதத்திற்கும் எத்தகைய பங்கு இருகின்றது என்பதை என்னால் உணர முடிந்தது..

( எப்போதும் எமது துணைக்கண்டத்து துரும்பையும் பெரியதாக சிந்திக்கும் எமது பாங்கு இங்குள்ள கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள் பலதை துச்சமாக எண்ணி உள்ளதே நினைத்து எனக்கு பெரும் தலைகுனிவாக உள்ளது. )

1995 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் ஹட்டன் நகரில் இருந்து வெளியான "நந்தலாலா" எனும் சிற்றிதழில் இது பற்றிய கருத்துரை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் முன்வைக்க பட்டது"பாரதியின் இன்றைய மதிப்பு" எனும் ஆக்கம். அவற்றின் தொகுப்பு:\



1. பாரதி நவீனத்தமிழின் முதல்புள்ளி. நவீனத்தமிழ்க்கவிதையின் தொடக்கம். இந்திய தேசிய எழுச்சியின் விளைவாக உருவான இந்திய நவகவிஞர்களில் முக்கியமான சிலரில் ஒருவர். தாகூர், ஜீபனானந்ததாஸ், குமாரன் ஆசான்,குவெம்பு என்று நீளும் அந்த நவகவிஞர்கள்தான் நவீன இந்திய இலட்சியவாதத்தை உருவாக்கியவர்கள். நம் ஜனநாயகத்தின் உண்மையான சிற்பிகள். அந்த இடம் பாரதிக்கு உண்டு 
"


2. பாரதி நவீனத் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கிய முன்னோடி. நாம் இன்று உணரும் தமிழ்ப் பண்பாட்டு சுயம் என்பது பாரதியால் தமிழ்ச்சமூக மனத்தில் உருவாக்கப்பட்டது. செவ்விலக்கியம், நாட்டார் கலை, மதங்கள் அனைத்தையும் இணைத்து அவர் அதை உருவாக்கினார்.


3. பாரதியின் ஆக்கங்களில் பெரும் புகழ்பெற்றுள்ளவை இசைப்பாடல்கள். ஆனால் அவை கவிதைகள் அல்ல. அவை எடுத்தாளப்பட்ட கவிதைகள். இசைப்பாடல் என்பது நேரடியான கவிதை வடிவம் அல்ல. இசையில்லாமல் அவற்றின் இடம் முழுமையடைவதில்லை.பாரதியின் இசைப்பாடல்கள் பெரும்பாலும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் மற்றும் அஷ்டபதியின் சாயல் கொண்டவை. அவரைத் தமிழின் மிகச்சிறந்த இசைப்பாடலாசிரியர்களில் ஒருவராக கருதலாம்



4. பாரதியின் காலகட்டத்திலேயே நல்ல நவகவிதைகள் எல்லா மொழிகளிலும் உருவாகிவிட்டிருந்தன. பாரதியின் கவிதைகளில் குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் சில தனிக்கவிதைகள் முக்கியமானவை. மழை, அக்கினிக்குஞ்சு, பிழைத்த தென்னந்தோப்பு போன்றசில கவிதைகள் மிகச்சிறப்பானவை.ஆனால் ஒட்டுமொத்தமாக அவை எண்ணிக்கையில் மிகக்குறைவு. ஒரு பெரும் கவிஞரை நிறுவுவதற்கு அவை போதாது.



5. ஆகவே பாரதி ஒரு சிறந்த கவிஞர், மகாகவிஞர் அல்ல. தமிழின் மாபெரும் கவிமரபை வைத்துப்பார்த்தால் மகாகவி என்ற பட்டத்தை ஒருவருக்கு எளிதில் வழங்கிவிடமுடியாது. கபிலர், பரணர், அவ்வையார்,பாலைபாடிய பெருங்கடுங்கோ, இளங்கோ,திருத் தக்கதேவர், திருவள்ளுவர், நம்மாழ்வார், கம்பர் , சேக்கிழார் என நம் பெருங்கவிஞர்களை நாம் பட்டியலிட்டால் அதில் ஒருபோதும் பாரதியைச் சேர்க்கமுடியாது.


6. பாரதியின் நல்ல கவிதைகள் கூடத் தரிசனத்தாலும்மொழிநுட்பத்தாலும் என்றும் நீடிக்கும் அழியாத பெருங்கவிதைகள் அல்ல. மனவேகத்தால் மட்டுமே நிலைகொள்வன. வேகம் மூலம் கைவரும் அபூர்வமான சொற்சேர்க்கைகளுக்கு அப்பால் நல்ல கவிதைகளில் நிகழும் வடிவ-தரிசன முழுமை அவரது கவிதைகளில் மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. பலகவிதைகளில் நல்ல வரிகள் உண்டு, ஒட்டுமொத்தக் கவிதையில் அந்த முழுமை கைகூடியிருப்பதில்லை.


7. பாரதி தமிழின் வழக்கமான மரபுக்கவிதையை இசைத்தன்மை மற்றும் நாட்டார்தன்மையை சேர்த்துக்கொண்டு உடைத்துப் புதிதாக ஆக்கினார்.அதன் மூலம் நம் மரபுக்கவிதையில் ஒரு குறுகியகால சலனத்தை உருவாக்கினார். ஆனால் அவரது சாதனை உரைநடையில்தான். அவர் நவீன உரைநடையின் பிதா என்பதே அவரது முதல்முக்கியத்துவம். அவரில் இருந்தே இன்றைய புதுக்கவிதை பிறந்தது


8.பாரதி தமிழ் இதழியலின் தொடக்கப்புள்ளி. இன்றைய இதழியல்தமிழ் அவரது உருவாக்கமே. அதன் சொல்லாட்சிகள், அதன் மொழிபுமுறை எல்லாமே அவரால் உருவாக்கப்பட்டவையே


9. பாரதி உலக இலக்கியத்தை நோக்கித் திறந்த தமிழின் முதல் சாளரம். மொழியாக்கத்திலும் மேலைக்கருத்துக்களை எடுத்தாள்வதிலும் அவர் தமிழின் முன்னோடி.
10. பாரதி தமிழ் நவீன உரைநடையின் அமைப்பை உருவாக்கியவர். ஆனால் பாரதியின் புனைகதைகள் மிகச்சிலவே இலக்கியமாகப் பொருட்படுத்ததக்க
வை. அவர

து சமகால வங்க, இந்தி, கன்னட ஆக்கங்களுடன் ஒப்பிட்டால் பாரதியின் கதைகள் எளிய நற்போதனைக்கதைகளாக உள்ளன. கதைமாந்தரும் சரி, கதைச்சந்தர்ப்பங்களும்சரி, சித்தரிப்பும்சரி மிக ஆரம்பநிலையில்மட்டுமே உள்ளன.""


ஒருபக்கம் பாரதி பற்றி உருவாக்கப்பட்டுள்ள பெரும் பிம்பம். மறுபக்கம் கலைநோக்கோ சமநிலையோ இல்லாமல் அவரை சாதிய நோக்கில் அவதூறுசெய்யும் எழுத்துக்கள். இரண்டும் இரண்டு வகையில் இலக்கிய வாசகனைக் கட்டாயப்படுத்துகின்றன.


பாரதியின் கவிதைகள்,கதைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு அவற்றின் சாதனைகளை சரிவுகளை விரிவான விமர்சன விளக்கத்துடன் எழுதவேண்டியிருக்கிறது. அதையே இன்றைய இளைஞர்களில் பலரின் எதிர்வினைகள் காட்டுகின்றன. ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாரதியின் தேசியப்பாடல்கள் இன்றைய இலக்கிய ரசிகனுக்குப் பெரிய அனுபவத்தை எதையும் அளிப்பவை அல்ல.

இன்னொருபக்கம் அவரது தோத்திரப்பாடல்கள் போன்றவை வெறும் செய்யுள்களாகவே நின்றுவிட்டவை. இன்று முழுபாரதி தொகுப்பை வாசித்தால் அந்த செய்யுட்களே அளவில் அதிகம் என்பதை ஒரு வாசகன் காணமுடியும்.
இவ்விரு தளங்களுக்கும் அப்பால் பாரதியின் சாதனைகள் அவரது குறைவான பாடல்களில் அவர் அடைந்த நேரடியான மன எழுச்சியை சார்ந்தவை. க.நா.சு சுட்டிக்காட்டிய மழை ஒரு சிறந்த உதாரணம். வசனகவிதைகளில் பாரதி அவரைத் திணறடித்த யாப்பின் தளை இல்லாமல் சுதந்திரமாகப் பறந்திருக்கிறார்.
இதெல்லாம் இன்றைய இலக்கியவாசகனுக்குத் தெளிவாகவே தெரிபவை. ஆனால் இவற்றை எழுத, விவாதிக்க நம்மிடம் பெரும் மனத்தடை இருக்கிறது.

எழுத்தாளரின் இந்த கருத்துரைக்கு பலரிடமிருந்து பலவைகையான கண்டன அலைகள் கிளம்பி இருந்ததை நான் அவதானித்தேன்.. ஆயினும் என்னால் இவரின் சில முன்வைப்புகள் நியாயபூர்வமாக இருந்தமையை மறுக்க முடியாது .. அவர் குறிப்பிட்டதை போல பாரதியின் பல ஆக்கங்கள் உணர்ச்சி கொந்தளிப்போ அன்றில் ஆக்கபூர்வ படைப்பு அல்ல என்பதுவே அவர் முன் வைக்கும் வாதம்.
//

ஜெ: 
எதையுமே உணர்ச்சிக்கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்வது, வெட்டிச்சண்டையாக மாற்றுவது என்றே நம் இலக்கிய விமர்சனச்சூழல் இருக்கிறது. எந்த விமர்சனமும் ஒரு படைப்பாளி மீதான வாசிப்பைக் கூர்மையே ஆக்கும் என்ற புரிதலுடன் நாம் விவாதித்தால் ஒருவேளை வரும்காலத்தில் நம்மால் பாரதி பற்றி ஒரு நல்ல கூட்டுவாசிப்பை நோக்கிச் செல்லமுடியலாம் -


[குழும விவாதத்தில் இருந்து]//

ஆக, பாரதி பற்றிய விமர்சன மரபு பல காலங்களாக முன் எடுக்கப்பட்டு வந்துள்ள போதும் இவற்றின் முரணை உணர முடியாமல் பழமை பேசிகளாக நான் இன்னும் யோசிக்காமல் இருபதுவும் கவலைகிடமே..


இந்த ஆக்கத்தின் போது "இதழியலின் முன்னோடி எங்கள் பாரதியார் " என்ற ஒரு ஆய்வு நூலினை வாசித்த ஞாபகம் எனக்கு வந்தது. அந்த நூலின் அடிப்படையில் "இதழாளர் இளசை சுப்பிரமணியம் " என்ற பாரதியின் இதழிய தொண்டு காலத்தை பதின் ஏழு ஆண்டுகளாக ஆய்வாளர் வரையறுத்து உள்ளார். மேற்படி நூலில் சக்கரவர்த்தினி, பால பாரதம், இந்தியா உள்ளிட்ட அவரின் பத்திரிகைகளின் ஆதார பூர்வ புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தன.



மேற்படி மின் நூலினை  இங்கே பெற்றுக்கொள்ளலாம்



அண்ணல் மகாத்மா காந்தி ஒரு நிருபரிடம் பின்வருமாறு கூறி இருந்தார் "பத்திரிகைகளில் பணிபுரிவதே தியாக வாழ்க்கை தான்".. ஆக பத்திரிகை யாளன் என்பவன் தியாக சிந்தனை கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது அவரின் கூற்று அதன் படி பாரதியும் நடந்து காட்டி இருக்கின்றார் என்பது ஆய்வாளர் "தமிழ் மணி மானா".வின் கருத்து..



ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப காலத்தில் விடுதலை வேட்கையின் நிமித்தம் பாரதியின் உணர்ச்சிபூர்வமான எழுத்துக்களும் ஆக்கங்களும் ஒரு முன் அனுபவமின்றிய ஒரு எழுத்தாளன் எனும் பதம் பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.....

மேற்படி அந்த ஆய்வு நூலில் பாரதியை ஒரு இலக்கிய வாதியாக காட்டும் இதழ்கள் சிலதும் முன் வைக்கப்பட்டு உள்ளன.

  • ஆர்யா - 1915
  • மெட்ராஸ் ஸ்டாண்டர்ட் - 1915
  • நியு இந்தியா - 1916
  • பெண் கல்வி - 1916
  • கலைமகள் - 1916
  • தேசபக்தன் - 1920
  • கதா ரத்னகாரம் - 1918 - 21

இந்த நூலின் இறுதியில் இலங்கையின் தமிழ் இலக்கிய முன்னோடிகளில் முதன்மையானவரான அமரர், பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் எண்ணப்பகிர்வானது " பாரதியின் இலக்கிய ஆவேசத்தையும், ஆத்மா பக்குவத்தினையும் அவரது கவிதைகள் திறம்பட காட்டுவான ஆயினும் அவரது சிந்தனை துளிகள் , உணர்ச்சி பொறிகள் ஆசாபாசங்கள் என்பன அவரது வசன படைப்புகளின் உள்ளே தெளிவாக காட்டுகின்றன" என்கிறது.




ஆயினும் என் பார்வையில் பாரதி என்பவன் ஒரு படைப்பாளி..அம்மனுஷ்யன் அல்லன். மேற்கண்ட நூலில் பாரதியின் படைப்புக்களின் திறம் பற்றி ஆராயப்பட்டது.. அதில் எனக்கு சில ஐயப்பாடுகளும் உள்ளன.




எழுத்தாளன் என்பவனுக்கும் இலக்கியவாதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.. இது கவிஞர்களுக்கும் பொருந்தும். புதுகவிதை புனைபவனுக்கும் ஒரு மரபு கவிஞனுக்கும் நிறையவே வித்தியாசம் இருகின்றது.. அதே உணர்ந்துகொள்ள ஒரு தனிப்பட்ட பக்குவமும் அறிவாற்றலும் இருக்க வேண்டியதுவும் அவசியமே... 



என்னை பொறுத்த வகையில் உணர்ச்சி பாங்கான வேகத்தில் தோன்றும் படைப்புகளுக்கும் உள்ளர்ந்தமான இலக்கிய படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளன.. பாரதியின் படைப்புக்கள் அமானுஷ்யமானவை அன்றில் ஆக்க பூர்வமானவையே....



மேற்படி எனது பதிவினை பதிவிட்ட பிறகு எனது ஊடக நண்பர்கள் சிலரால் மேற்படி கருத்து விவாதிக்கப்பட்டது 



அந்த வகையில் மூத்த எழுத்தாளர் ஜின்னா ஷெரீப்தீன் அவர்கள் பதிவிட்ட கருத்து இங்கே 



அவ்வண்ணமே பதிவர் தோழி , சோதரி தேனம்மை லெஷ்மண் அவர்கள் இந்த பதிவிடல் குறித்து சில கருத்துக்களை அவரது வலைத்தளமான "சும்மா" விலும் குறிபிட்டு இருந்தார்.

பதிவினை வாசிக்க இங்கே சொடுக்கவும்



எமக்கு முந்திய தலைமுறையினர் ஏற்றுக்கொன்ட விடயங்கள் காலப்போக்கில் வாதிக்கப்பட்டு குறை அறியப்படுவது . இதனை நவீன வளர்ச்சியின் தார்மீகம் என்பதா? அல்லது தவறுதல் என்பதா?..
எவ்வாறாயினும்.. ஆக்கபூர்வ கருத்தினை மீண்டும் மீண்டும் அலசி விமர்சிப்பதால் அது மேலும் மெருகேரும்..




மேற்படி என் தனிப்பட்ட கருத்து பகிர்வானது பலரையும் கருத்து கூற வைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் அணைத்து விமர்சனகளையும் வேண்டி நிற்கிறேன்......


-பொ.சைலஜா